நடிகை சிம்ரன் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யாவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்ரன் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, வாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது சிறு வயது நண்பரான தீபக் என்பவரை சிம்ரன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
)
சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வந்தார். சிம்ரன் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் நடித்த மஹான், ஆர்யா நடித்த கேப்டன் ஆகிய படங்களில் சிம்ரன் நடித்தார். கடைசியாக பிரஷாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அந்தகன் திரைப்படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் சிம்ரன் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நல்ல குடும்ப கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிம்ரன் கலந்து கொண்ட போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு, பிரபுதேவா நடிப்பில் வெளியான விஐபி என்ற படத்தில் முதலில் நடித்த அப்பாஸ், ரம்பா மற்றும் பிரபுதேவா எல்லோரும் கமிட் ஆகிட்டாங்க. பிறகு பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகையை பேசி இருந்தோம். ஆனால் அவங்க ப்ரொடியூசர் வரணும் என்று சொன்னதால் அவங்கள வேண்டாம் என்று சொல்லிட்டு அந்த இடத்துல சிம்ரனை கமிட் பண்ணோம்.

அந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்து அதில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதில் ஒரு பாட்டுக்கு மட்டும் சிம்ரன் மூன்று நிமிடம் வருவதற்கு அந்த காலத்திலேயே 48 லட்சத்துக்கு செட் போட்டேன். அதன் பிறகு அந்த செட்டை பாம்பே மற்றும் ஆந்திராவில் இருந்து எல்லோரும் வந்து கேட்டாங்க. ஆனா நமக்குனு ஒரு பேர் இருக்க வேண்டும் என்பதற்காக அதை நான் உடைத்து விட்டேன் என்று கலைபுலி எஸ் தானு பேசியுள்ளார்.
