“குடும்பத்தை பிரிந்து ஹோட்டலில் தனிமை வாழ்க்கை”… நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு… அடையாறு பாலத்தில் நடந்தது என்ன?… தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை பின்னணி…!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 1980-களில் இருந்து தமிழ் சினிமாவில் தீவிரமாக இயங்கி வந்த ஒரு மூத்த ஆளுமை, தனது 85 வயதிலும் சுறுசுறுப்புடன் வலம் வந்த நிலையில், திடீரென இத்தகைய விபரீத முடிவை தேடிக்கொண்டது திரையுலகினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கிளம்பிய கே. ராஜன், கார் அடையாறு ஆற்றங்கரை அருகே வந்தபோது நிறுத்துமாறு கூறியுள்ளார். சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், எதிர்பாராதவிதமாக திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இருந்து அவரது உடலை சடலமாக மீட்டனர். அதன் பின்னரே, ஆற்றில் குதித்து உயிரிழந்தவர் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது.

   

தற்போது அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக அவருடன் பயணித்த கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல், குடும்பத்தினருடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்ததாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவில் சமரசமற்ற ஒரு குரலாக ஒலித்து வந்தவர் கே. ராஜன். திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும் இன்றி அதிரடியாகப் பேசுவது இவரது பாணியாகும். தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நிலவும் முறைகேடுகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983-ஆம் ஆண்டு சுரேஷ் நடித்த ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே. ராஜன், ‘கணேஷ் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், நிழல்கள் ரவி, சரத்குமார் நடித்த ‘நம்ம ஊரு மாரியம்மா’ மற்றும் அப்பாஸ், குணால் நடித்த ‘உணர்ச்சிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்த இவரது மகன் பிரபுகாந்த், தமிழ் சினிமாவில் 2019-இல் வெளியான ‘எல்கேஜி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகின் மூத்த தூணாக விளங்கிய கே. ராஜனின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.