திருப்பத்தூர் அண்ணாநகர் கூட்டுச் சாலையில், தனியார் பேருந்து ஒன்று கல்லூரிப் பேருந்து மீது அதிவேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சேலத்தில் இருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு நேரம் தவறாமல் செல்ல வேண்டும் (டைமிங் பிடிக்க) என்ற நோக்கில், தனியார் பேருந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அதே நேரத்தில், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரிக்குச் செல்ல, கல்லூரிப் பேருந்து அண்ணாநகர் கூட்ரோடு சந்திப்பைக் கடக்க முயன்றது.
அப்போது, எதிர்பாராத விதமாக அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லூரிப் பேருந்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த கோர விபத்தில், கல்லூரிப் பேருந்தில் பயணித்த மாணவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக மாற்றுப் பேருந்தை வரவழைத்து மாணவர்களைப் பத்திரமாக கல்லூரிக்கு அனுப்பி வைத்தது.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்ணாநகர் கூட்டுச் சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிட்ட பகுதி மக்கள், அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு உடனடி நடவடிக்கையாக வேகத்தடைகள் அல்லது தடுப்புகளை (Barricades) அமைக்க வேண்டும் எனத் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
