தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாதாரண பேருந்துகள், எக்ஸ்பிரஸ், LSS, Deluxe, புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ தூரம் வரையிலான மலைப்பகுதி பேருந்துகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் முற்றிலும் இலவசமாக பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இலவசமாக செல்ல முடிவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும்பான்மையாக அரசு பேருந்துகளையே தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் அதே வேளையில், தனியார் பேருந்துகளில் கடுமையான பயணிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்துகளின் தினசரி வருமானம் பெருமளவில் சரிந்து, அவற்றின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுகட்ட சில தனியார் பேருந்துகள் கட்டணத்தை கணிசமாக உயர்த்திய போதிலும், பயணிகள் வருகை மேம்படவில்லை என்பதே கள நிதர்சனமாக உள்ளது.
இப்பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக, நாகர்கோவிலிருந்து கன்னியாகுமாரி செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. “அரசு இலவச பேருந்துகள் அதிகளவில் இயங்குவதால் எங்கள் பேருந்து முற்றிலுமாக காலியாக உள்ளது. பயணிகள் இல்லாததால் குறிப்பிட்ட டிரிப்பையே ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்; இப்படியே போனால் எங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது?” என அவர் அதில் வேதனையுடன் புலம்பியுள்ளார். இத்திட்டம் மக்களுக்கு பயனளித்தாலும், தனியார் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
