ரூ.4,730 கோடி மணல் கொள்ளை…. சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்… ED அனுப்பிய லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ்….. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்து வழக்குகள் பதியப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ரூ. 4,730 கோடி மதிப்பிலான மணல் குவாரி ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு அதிகமாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய பெருந்தொகை சுருட்டப்பட்டதாகவும் மத்திய அமலாக்கத்துறை (ED) சான்றுகளுடன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த ஆற்று மணல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவில் மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை தலைமை இயக்குநருக்கு (DGP) ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்கு முன்பாக, முறைகேடுகள் நடைபெற்றதை உறுதிசெய்யும் பொருட்டு தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

   

அமலாக்கத்துறையின் விசாரணையில், இஸ்ரோ அமைப்பின் தேசிய தொலைவு உணர்வு மையத்தின் (NRSC) செயற்கைக்கோள் பட உதவி மற்றும் ஜிபிஎஸ் (GPS) தரவுகள் பயன்படுத்தப்பட்டு 28 மணல் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அனுமதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, வரையறுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூடுதலாக மணல் அள்ளப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அரசுக்குக் கிடைத்த குறைந்தபட்ச வருவாயை விட, சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணலின் மொத்த மதிப்பு ரூ.4,730 கோடி என அமலாக்கத்துறை தனது கணக்கீட்டில் தெரிவித்துள்ளது.

   

இந்த மணல் கொள்ளை சம்பவங்களில் நீர்வளத்துறை ஒப்பந்தங்களை கவனித்து வந்த முக்கிய தொழிலதிபர்களான புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோர் முக்கிய நபர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளுடனான நேரடித் தொடர்பைப் பயன்படுத்தி, விதிமீறல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, இவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் ராட்சத மணல் அள்ளும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

 

விசாரணையின் தொடர்ச்சியாக, சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடர்புடைய நபர்களின் ரூ.130 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், 35 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் கண்காணிப்புத் தவறிய 10 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மணல் குவாரி விவகாரம் தொடர்பான சட்டப் போராட்டமும் விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.

ஒருபுறம் மணல் குவாரி முறைகேடுகள் குறித்த லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய முகமைகளின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில எல்லைகளைத் தாண்டி கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கனிமவளப் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணைநின்ற அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் நிர்வாக ரீதியாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.