கேரளாவில் பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பூசாரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடலில் தீய ஆவி உள்ளதாகவும், அதனை விரட்ட விசேஷ சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் என்ற பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற அந்தப் பெண்ணை, பூசாரி ராஜேஷ் தனிமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பலமுறை அப்பெண்ணை மிரட்டி தொடர் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியுள்ளார்.
இதனைக் தாங்க முடியாத பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் தைரியமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், ராஜேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஷாஜஹான், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் ராஜேஷைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்; மேலும் அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
