மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவல்துறையினர் அவரை ஷூ காலால் தலையில் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், வீடு திரும்பிய அவருக்குத் தொடர் வாந்தி, தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நடந்த கொடூரத் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என அவரது உறவினர்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தன் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் தன்னைத் தாக்கிய காவல்துறையினரே முழுப் பொறுப்பு என இறப்பதற்கு முன்பாக பரமசிவம் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள காவல்துறை தரப்பு, பரமசிவம் ஏற்கனவே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது. அவரது மரணத்திற்கான உண்மையான பின்னணி, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தற்போது நடைபெற்று வரும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையின் முடிவிலேயே முழுமையாகத் தெரியவரும் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
