கும்பகோணம் அருகே திருவளஞ்சுலியில் 13 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கபர்தீஸ்வரசுவாமி கோவிலில் 75 வயதுடைய விஸ்வநாதன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் எட்டாம் தேதி பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்துள்ளார். அந்த சிறுமி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு தனியாக சென்றபோது விஸ்வநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மகள் நீண்ட நேரமாக வராததால் பெற்றோர் கோவிலுக்கு சென்ற பார்த்தனர். அப்போது சிறுமி அழுது கொண்டே வெளியே வந்தார். ஏன் அழுகிறாய் என பெற்றோர் கேட்டபோது மார்பு பகுதி, உட்காரும் இடம் வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் விஸ்வநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
