விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். தவெக-விற்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, தாங்கள் தற்போது மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் உறுதியாக இருப்பதாகப் பதிலளித்த அவர், ஒரு எம்.எல்.ஏ-வாகத் தனது தொகுதி மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிப்பேன் என்றும் உறுதிபடக் கூறினார்.
விஜய்யுடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரேமலதா, அவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதுவதாகக் குறிப்பிட்டார். “விஜய் எங்களுக்குப் புதியவர் அல்ல, பக்கத்து வீட்டில் வசித்தவர்; கேப்டன் விஜயகாந்துடன் ஆரம்பக்காலம் முதலே நெருங்கிப் பழகியவர்” என்று நினைவுகூர்ந்த அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் விஜய் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என வாழ்த்தினார். தனிப்பட்ட முறையில் விஜய்யின் அரசியல் வெற்றிக்குத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, புதிய அரசு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
