தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சில கட்சிகள் கூட்டணியை அமைத்துவிட்டு வெற்றி வாகை சூடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில கட்சிகள் மட்டும் இன்னும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றன. அந்தப் பட்டியலில் தேமுதிகவும் இடம்பெற்றுள்ளது. இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடவில்லை.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக நெருக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொல்லவே இல்லை என பிரேமலதா கூறியதற்கு பிறகு இரு கட்சிகளுக்கும் நட்பு வலுப்பெற்றுள்ளது. இதனிடையே இபிஎஸ், மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர நான்காண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த முதல்வர் பொறுப்பை சிறப்பாக செய்தார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
