“உளறாதீங்க பிரேமலதா..” – போனில் திட்டித்தீர்த்த எ.வ.வேலு… அறிவாலயத்தில் வெடித்தது மோதல்… அண்ணியார் பேச்சால் அப்செட்டான ஸ்டாலின்….!

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது முதல் ஒருவித இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் ஒரு பேச்சு கூட்டணியின் அஸ்திவாரத்தையே உலுக்கியிருக்கிறது. சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலேயே, தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பிரேமலதா பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அதே விமர்சனத்தை ஆளுங்கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவரே மேடையில் பகிரங்கமாகப் பேசியது, திமுக தலைமையைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிகழ்வு முதல்வர் ஸ்டாலினை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. கூட்டம் முடிந்தவுடன் பிரேமலதாவிடம் பேசாமல் முதல்வர் உடனடியாகக் கிளம்பியது அங்கு நிலவிய பதற்றத்தை உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பிரேமலதாவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய அமைச்சர் எ.வ. வேலுவைத் தொடர்பு கொண்ட முதல்வர், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு கூட்டணிக் கட்சித் தலைவராக இருந்துகொண்டு, அரசின் மீது இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது.

   

முதல்வரின் கோபத்தை அடுத்து, அமைச்சர் எ.வ. வேலு உடனடியாக பிரேமலதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பாணியில் எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அதிமுகவும் பாஜகவும் எந்தப் புள்ளியை வைத்து அரசியல் செய்கிறார்களோ, அதையே நீங்கள் மேடையில் பேசுவது முறையல்ல; இது கூட்டணிக் தர்மத்திற்கு எதிரானது” என அவர் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தான் சொல்ல வந்த செய்தி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகப் பிரேமலதா விளக்கம் அளித்தாலும், மேடையில் பேசிய வார்த்தைகள் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய அரசியல் ஆயுதமாகக் கிடைத்துவிட்டன.

   

அதிமுகவுடன் கூட்டணி சேரவிருந்த தேமுதிகவை, 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி எனப் பல்வேறு வாக்குறுதிகளுடன் திமுக பக்கம் இழுத்து வந்தவர் எ.வ. வேலு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்தச் சூழல், திமுக கூட்டணிக்குள் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தல்களில் இந்த ‘உளறல்’ விவகாரம் தேமுதிக – திமுக இடையிலான உறவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், பிரேமலதா தனது பிரசாரப் பாணியை மாற்றிக்கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.