தமிழகத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்த எதிர்ப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனதாரப் பாராட்டியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றியமைப்பது தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்ற கவலையைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், விஜய்யின் இதே குரல் தங்களுக்குக் கிடைத்த கூடுதல் பலமாகவே சிதம்பரம் கருதுகிறார்.
ஏற்கனவே “உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக பக்கமே உள்ளனர்” என விஜய் பேசியது திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸாரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சூழலில், தற்போதைய தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாட்டைப் பாராட்டுவதுடன், தங்கள் தரப்புக் குரலை அவர் எதிரொலித்ததற்காகப் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்திருப்பது, வரும் காலங்களில் தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாக வாய்ப்புள்ளதோ என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே கிளப்பியுள்ளது.
