திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த சலசலப்புகள் நிலவி வரும் சூழலில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பொன்னேரியில் பிப்ரவரி 15 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் “தங்களை அவமானப்படுத்தினால் பதிலடி கொடுப்போம்” என்று பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், “திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு அப்படி என்ன பவர் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியதற்கு, சசிகாந்த் செந்தில் மிகவும் நிதானமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் பதில் அளித்தார்.
அவர் பதிலளிக்கையில், “ஒரு அரசியல் கட்சிக்கு ‘பவர்’ என்பது எப்போதும் தானாக வந்துவிடாது; அதை மக்கள்தான் வழங்க வேண்டும். திருப்பி அடிக்கும் பவர் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறினார். மேலும், தற்போது இந்தியாவில் ஒரு மிகப்பெரிய சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டமே மாற்றப்படும் அபாயம் நிலவும் சூழலில், சொந்த விருப்பு வெறுப்புகளை விட நாட்டின் நலனே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்றும், அதை பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
