சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் மலையாள நடிகர் விநாயகன் பலத்த அடிபட்டார். இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது விநாயகன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதற்கு சிலர் விநாயகனின் முந்தைய செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் விதமாக இதற்கெல்லாம் அவருடைய கர்மா தான் காரணம் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் விநாயகன் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தயவுசெய்து கர்மா பற்றி யாரும் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். என்னுடைய சாவை நேரம்தான் தீர்மானிக்கும். நான் ஒன்றும் என்னுடைய கெட்ட செயல்களுக்காக இந்த காயத்தை அடையவில்லை. என்னுடைய வேலை நேரத்தில் தங்களை மிகுந்த அறிவார்ந்தவர்கள் போல் காட்டிக்கொண்ட ஒரு சிலரை நம்பியதால் தான் இது நடந்தது. என்னுடன் உறுதுணையாக நிற்பவர்கள் இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை கூடி இருக்கிறதே தவிர குறையவில்லை என்று நடிகர் விநாயகன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
