தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 20500 ரொக்கம் வழங்கப்பட்டது. அதுவே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்க தொகை ஆகும். அதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்படாமல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மகளிர் உரிமை தொகையும் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருவதால் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் காந்தி, தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. அதன் விநியோகம் விரைவில் தொடங்கும். வருகின்ற ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
ரொக்கம் வழங்கப்படுவதாக இருந்தால் அது பொங்கல் தொகுப்போடு சேர்த்து தான் வழங்கப்படும். எனவே ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
