“கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லன்னா செத்துப்போ”… மறுத்த சிறுமியை பாட்டி கண்முன்னே துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்….!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த கொண்டேகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் 16 வயது மகள் கௌசி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். இவருக்கும் நெகமம் அருகே உள்ள கப்பளங்கரை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அபிஷேக் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்கு சிறுமியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த போதிலும், திருமண வயது எட்டாததால் படிப்பைத் தொடருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அபிஷேக் பிடிவாதம் பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை பூபதியின் வீட்டிற்குச் சென்ற அபிஷேக், தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கௌசியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அபிஷேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌசியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

   

இந்தக் கொடூரத் தாக்குதலைத் தடுக்க முயன்ற சிறுமியின் பாட்டி மயிலாத்தா மற்றும் 17 வயதுடைய அக்கா ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த கௌசி மற்றும் பாட்டி மயிலாத்தா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூத்த மகள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், குற்றவாளி அபிஷேக் நெகமம் காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காதலுக்காகக் கொல்லப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.