தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திமுகவை “பாப்பா மாடல்” என்று விமர்சிக்க, அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த பதில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, “பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்பவருக்கு எனக்கு பதில் சொல்லத் திராணி இருக்கிறதா?” என அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சரின் இந்த விமர்சனம் இரு கட்சியினரிடையே சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைப்போராக வெடித்துள்ளது.
அமைச்சர் ரமேஷின் இந்த பதிவிற்கு திமுக ஐடி விங் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. ஆர்.எஸ். பாரதி அவர்கள் “பாப்பா” (Baby) என்றுதான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார் என்றும், அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து ‘விக்டிம் கார்டு’ விளையாடி தவெக சமூகப் பதற்றத்தை உருவாக்கப் பார்க்கிறது என்றும் திமுக ஐடி விங் சாடியுள்ளது. மேலும், “வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டும் ‘தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்’ அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது” எனக் குறிப்பிட்டதோடு, SRM விவகாரம் மற்றும் மறைமலை நகர் பகுதி மக்கள் கூறும் புகார்கள் திமுகவுக்கு தெரிந்துவிட்டதால் ஏற்படும் வலியே அமைச்சரின் இந்த மலிவான அரசியலுக்குக் காரணம் என்றும் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளனர்.
