வான்டட் குற்றவாளிகளுடன் ஆட்டம் போட்ட போலீஸ்காரர்… திருமணமான ரெண்டே நாளில் பறிபோன வேலை… வீடியோ வைரலானதால் அதிரடி நடவடிக்கை…!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

ராஜஸ்தானில் ஒரு காவலர் தனது திருமணத்தில் தேடப்படும் குற்றவாளிகளை அழைத்த காரணத்திற்காகப் பணியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜாலாவார் மாவட்டத்தின் பால்டா காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த அசோக் பிஷ்னோய் என்பவரது திருமண விழா, கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நாகூரில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜாலாவார் மற்றும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் எட்டுக்கும் மேற்பட்ட கொடிய குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ரவுடிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மேடையில் ஏறி உற்சாகமாக நடனமாடியதுடன், பணத்தை வாரி இறைத்துக் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் ஜாலாவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், காவலர் அசோக் பிஷ்னோய் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக அவர் உடனடியாகப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் தனது அரசு வேலையை இழந்த அசோக் பிஷ்னோய், தற்போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.