சென்னை பள்ளிக்கரணை அருகே நடைபெற்ற வாகன சோதனையின் போது நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் காவலரின் செய்கையை புறக்கணித்த அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மேகநாதன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றுள்ளார்.
அப்போது மது போதையில் கார் ஓட்டி வந்த சாய்ராம் என்பவர் திடீரென பைக்கில் மோதியதால் காவலர் மேகநாதன் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். கடும் காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த சாய்ராம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த துயரமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
