தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா சுப்புலட்சுமியின் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் பிரியாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தட்டாரமடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் (33) என்பவருக்கும் சுப்புலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களது சட்டவிரோத உறவை அறிந்த பிரியா, தன் அக்காவைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் பிரியா மீது கடும் ஆத்திரத்தில் இருந்த காவலர் முத்துக்குமார், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஜெராக்ஸ் கடையை மூட வந்த பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து பிரியாவின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய காவலர் முத்துக்குமாரைப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர். கைதான முத்துக்குமார் ஏற்கெனவே மாமனாரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
