புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியைச் சேர்ந்த பிரபாகரன் (39), அரியலூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ள நிலையில், மழையூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த மௌனிகா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பழக்கம் பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
மௌனிகா கர்ப்பமடைந்ததை அடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். பிரபாகரன் மறுப்பு தெரிவிக்கவே, அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உயரதிகாரியின் தலையீட்டால் பிரபாகரன் அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் மௌனிகா தாய் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு தற்போது 7 வயதாகிறது. குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரைச் சேர்க்குமாறு மௌனிகா தொடர்ந்து வலியுறுத்தியதால், பிரபாகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயரதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து தனக்குப் பிரச்சனை ஏற்படுத்திய மௌனிகா மீது பிரபாகரனுக்கு ஆத்திரமும் பகையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த பிரபாகரன், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி மௌனிகாவை அரியலூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்தபோது தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறி அக்டோபர் 10 அன்று அவர் மட்டும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அதன் பிறகு மௌனிகா திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் பிடிபட்ட பிரபாகரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. குடும்பத் தகராறில் மௌனிகாவை அடித்துக் கொலை செய்து, பிரபாகரனின் நிலத்திற்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இரவோடு இரவாகக் குழிதோண்டிப் புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரபாகரனைக் கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட மௌனிகாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
