“போதை இல்லா பாரதம் என பிரதமர் பேச்சு”…. இடுப்பில் மது பாட்டில்.. பாக்கெட்டில் குட்கா…. கூட்டத்திற்குள் புகுந்த தொண்டர்கள்… மதுரையில் அரங்கேறிய கூத்து….!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது குறித்து உரையாற்றிய அதே வேளையில், கூட்டத்திற்கு வந்த சில தொண்டர்களிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி போலீஸார் மேற்கொண்ட தீவிர சோதனையின் போது, கூட்டத்திற்கு வந்திருந்த சில தொண்டர்கள் தங்கள் சட்டைப் பைகள் மற்றும் இடுப்புப் பகுதியில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீஸார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

   

Police Seize Liquor Tobacco at NDA Event Where PM Modi Vows Drug-Free India

   

மது பாட்டில்கள் மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட குட்கா, பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களையும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஊசி, தீப்பெட்டி போன்ற பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்த பின்னரே தொண்டர்களைக் கூட்டத்திற்குள் அனுமதித்தனர். நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருள் மாஃபியாக்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும், தமிழகத்தில் போதைப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேடையில் முழங்கினார்.

 

“மதுபானத்தால் குடும்பங்கள் அழிகின்றன, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” எனப் பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கூட்டத்திற்கு வந்தவர்களிடமே இத்தகைய பொருட்கள் பிடிபட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேடையிலேயே இச்சம்பவம் நடந்தது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.