திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கண்ணன் மற்றும் அவரது உறவினர் பெரியசாமி ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்பப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் முத்துக்குமார், செல்வராஜ், செல்வபாண்டி, தூங்கன் ஆகிய 4 பேருக்குத் திண்டுக்கல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 2023-ல் ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கின் விசாரணை அதிகாரி காவல் நிலையத்தில் இருந்தபடியே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என்றும், சம்பவ இடத்திற்குச் சென்று எந்தவொரு முறையான பணியையும் செய்யவில்லை என்றும் கடுமையாகக் குற்றஞ்சாட்டியது. கொலையான ஒருவரின் துண்டிக்கப்பட்ட இடது கையைக்கூட விசாரணை அதிகாரி கைப்பற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சமீப காலங்களில் தாங்கள் கண்டதிலேயே மிகவும் அலட்சியமான விசாரணை இதுதான் என வேதனை தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் முக்கிய சாட்சிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளதோடு, விசாரணை அதிகாரியின் விசித்திரமான மற்றும் அலட்சியமான நடைமுறைகளால் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளைச் சரியாக நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால், 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, வேறு வழக்குகள் இல்லை எனில் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டது.
