புனே நகரின் கோத்ருட் பகுதியில் உள்ள பௌட் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எம்.ஐ.டி கல்லூரி வளாகத்திற்கு அருகே அடுத்தடுத்து நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயங்களுக்கு ஆளாகினர். விபத்து நடந்ததும் சுற்றியிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 24 வயதான கல்லூரி மாணவர் மது அருந்திய நிலையில் காரை இயக்கியதாக அங்கு கூடியிருந்தவர்கள் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
