“ஸ்டாலின் கடும் கோபம்.. காங்கிரஸுக்காக இவ்வளவு செஞ்சோம், ஆனா”…. உடைந்து பேசும் திமுக நிர்வாகிகள்….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தொடரும் திமுக – காங்கிரஸ் இடையிலான தேர்தல் கூட்டணியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களும், ‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கமும் திமுக தலைமையைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரின் சமீபத்திய கருத்துக்கள் இந்த விரிசலை ஊதிப் பெருக்கியுள்ளன.

கடந்த பிப்ரவரி 15 அன்று மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், 2014-ல் திமுக செய்த தவறுகளுக்காகத் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக மாணிக்கம் தாகூர் பேசியது அறிவாலய வட்டாரத்தை கொந்தளிக்கச் செய்துள்ளது. அதேபோல், தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்து பிரவீண் சக்கரவர்த்தி முன்வைத்த விமர்சனங்கள், திமுக அரசின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரிகமற்ற செயல் என திமுக தரப்பில் கூறப்படுகிறது.

   

பாஜகவின் அரசியல் நெருக்கடிகளையும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளையும் காங்கிரஸ் உடனான கொள்கை ரீதியான நட்புக்காகவே தாங்கள் எதிர்கொண்டு வருவதாக திமுக நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். காங்கிரஸைத் தாங்கிப் பிடிப்பதற்காக திமுக கொடுத்த விலை அதிகம் என்றும், ஆனால் இப்போது அதே காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வரும் செய்திகள் “முதுகில் குத்தும் செயல்” என்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.

   

தற்போதைய சூழலில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள் மீது மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்காத வரை, தொகுதிப் பங்கீடு குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ‘ஆட்சியில் பங்கு இல்லை’ என்பதை ஏற்கனவே திமுக தெளிவுபடுத்திவிட்ட நிலையில், காங்கிரஸின் பிடிவாதமான போக்கு 2026 தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.