இனி சௌமியா அன்புமணி தான் எல்லாமே…. பாமகவுக்கு குட்-பை சொல்லும் திலகபாமா?…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி, கட்சி ஒன்றுபட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் திலகபாமாவுக்கு எதிர்பார்த்த முக்கியத்துவமோ, உரிய மரியாதையோ அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் சிவகாசியில் தனது கணவர் நடத்தும் மருத்துவமனை நிர்வாகப் பணிகளில் தினமும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் பாமக தலைமை கடினமான தொகுதிகளிலேயே திலகபாமாவைக் களமிறக்கியது. முந்தைய தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் தோல்வியடைந்த அவர், சட்டசபைத் தேர்தலில் தொகுதிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதபோதிலும் கட்சியின் கோரிக்கையை ஏற்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தபோதே, அன்புமணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முதல் நிர்வாகியாகத் திகழ்ந்த திலகபாமா, தற்போதைய புறக்கணிப்பால் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

   

கட்சியில் தற்போது சௌமியா அன்புமணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து உழைத்தும் தனக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற மனக்குறையில் திலகபாமா உள்ளார். மேலும், தான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாமகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் அவரிடம் எழுந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

   

இத்தகைய சூழலில், அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகித் தன் சமூக மக்களுக்குச் சேவை செய்வதில் அதிக ஈடுபாடு காட்ட அவர் திட்டமிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூக அமைப்புகள் மற்றும் சமூகப் பணிகள் சார்ந்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கத் திலகபாமா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.