பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ், திமுக அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்று குற்றம் சாட்டி, அதற்கான ஆவணப் புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இதுவரை 57 ஆவணங்களை பா.ம.க. வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திமுக அரசு ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்துள்ளதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் தொடர்ந்து பொய்த் தகவல்களைக் கூறி வருகிறது என்று அவர் விமர்சித்தார். 2024ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ஆயிரம் கோடிக்கும் அதிகமான பெரிய ஒப்பந்தங்கள் ஒன்று கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும், இது மிகப் பெரிய பொய் என்றும் ஆவணம் மூலம் நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 47,650 பேருக்கு வேலை கிடைத்ததாகவும் விளம்பரப்படுத்தினர். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் மூலம் ஒரு பைசா முதலீடு கூட தமிழகத்திற்கு வரவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.
வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும், முதலீடுகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மாறிச் செல்வதற்குக் காரணம் கமிஷன் மற்றும் ஊழல்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழராக இருந்தும், அவரது நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்குச் சென்றதற்குக் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
