தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.
இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அதில் பாமக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாமக எந்த கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து நிர்வாக குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் மழுப்பலாக கூறியுள்ளார்.
