பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாளே நேர்ந்த பெரும் சோகம்…. துடிதுடித்து உயிரிழந்த மாணவி…..!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

மதுரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், தேர்வெழுதச் சென்ற மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி (17) என்ற மாணவி, இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதல் நாளான தமிழ் மொழித் தாள் தேர்வை எழுதுவதற்காகத் தயாராகியிருந்தார். தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

   

இந்தக் கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி துர்கா தேவி மீது பேருந்து ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

கனவுகளுடனும், எதிர்கால லட்சியங்களுடனும் முதல் பொதுத்தேர்வை எதிர்கொள்ளச் சென்ற மாணவி, தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பே விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், சக மாணவர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டிகளின் கவனம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.