தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக அரசு அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை முடக்க எதிர்த்தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு கும்பல் ரகசியமாக பேரம் பேசியுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சரும், திமுக நிர்வாகியுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதல் இருப்பதாக பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் ஐடிபிஎஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அசோக் குமாரை கரூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பழி சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறி அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசை கவிழ்ப்பதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனம் சுமார் ரூ.180 கோடியை தயார் நிலையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை கிண்டி மற்றும் இ.சி.ஆர் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து, இந்த சதித்திட்டத்திற்கான ரகசிய ஆலோசனைகள் அரங்கேறியுள்ளன. இந்த சொகுசு ஹோட்டல் அறைகளுக்கான கட்டண பில்களை அந்த கார்ப்பரேட் நிறுவனமே நேரடியாக செலுத்தியதற்கான திடுக்கிடும் ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன.
இந்த நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்திட்டம் தீட்டிய கும்பல், தவெக எம்.எல்.ஏ.க்களைத் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளது. ஜூன் 29 அன்று ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்பவர், சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். எனினும், தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த பேரத்திற்கு பணியாமல், “எங்களை இனி தொடர்பு கொள்ள வேண்டாம்” என கறாராக மறுத்துவிட்டனர். எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தைரியமாக அளித்த புகாரே இந்த பிரம்மாண்ட அரசியல் சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
