காகித ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழிந்து மற்றும் சேதமடைவதால், அதற்கு மாற்றாக அதிக ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட நீண்ட காலம் உழைக்கக் கூடியவை என்பதால், ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு மற்றும் பராமரிப்புச் சுமை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் ஏற்கனவே சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இத்தகைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுப்பதற்கும், தூய்மையான பணப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு முக்கியப் படியாக அமையும்.
