குஜராத் மாநில அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இப்படியான நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே பயணி இருக்க எண் 11A இல் பயணித்த விஷ்வாஷ் குமார் ரமேஷ் (40) ஆவார். இதனிடையே தாய்லாந்து நடிகர் ரூங்சக் லோய்சுசக்(47), கடந்த 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளான போது அவரும் அதே 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே இருக்கையில் தான் அமர்ந்திருந்தார் என்று அவர் பதிவிட்டுள்ள இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
