தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது. இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் சீராகத் தங்க மோதிரம் வழங்கும் திட்டங்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள அரசின் முதல் பட்ஜெட்டிற்கான ஆலோசனைக் கூட்டங்கள் முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் மகளிர் மேம்பாட்டிற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இளம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் புதிய தொழில்களைத் தொடங்கிச் சொந்தக் காலில் நிற்பதை ஊக்குவிக்கும் வகையில், ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் கூட்டுறவு வங்கிகள் மூலமாகச் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டில் ரூ.7,000 கோடி கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏற்கனவே பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கோடு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, உழைக்கும் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
