கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் சிறப்பு வழிகாட்டுதலின்படி, அம்மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்திலும் எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசன முகாம்களைக் கட்டாயமாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் சுமார் 2.6 லட்சம் பேர் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்; சுமார் 54,000 பேருக்குத் தங்களுக்குப் பாதிப்பு இருப்பதே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களிடையே இத்தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வயதுப் பிரிவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2023-24-இல் 44,500-ஆக இருந்தது, தற்போது 2025-26-இல் 66,600-ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 முதல் 25 வயதுடைய 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு புதிதாக எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்தே, உயர் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் கல்லூரி வளாகங்களிலேயே முகாம்களை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
