தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விரிவாக்கம் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்த, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வரும் ஜனவரி 21-ஆம் தேதி சென்னை வருகிறார். மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கியிருக்கும் அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்த பயணத்தின் போது, அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்திருந்த பியூஷ் கோயல், முதற்கட்ட ஆலோசனைகளை முடித்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது கட்டப் பயணம் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும், வரும் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வரவுள்ளார். பிரதமரின் வருகைக்கு முன்பாகவே தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை நிறைவு செய்து, கூட்டணி கட்சிகளை இறுதி செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. பிரதமரின் பொதுக்கூட்ட மேடையில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம், தேர்தலுக்கான பலமான அடித்தளத்தை அமைக்க பியூஷ் கோயலின் இந்த மூன்று நாள் பயணம் வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
