சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது மாணவியிடம் இன்ஸ்டாகிராம் வழியே பழகத் தொடங்கியுள்ளார். அவர்களுக்குள் 28 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், “படிப்பைப் பாதிக்காத வரை தவறு இல்லை” எனக் கூறி மாணவியை நம்பவைத்து, தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
பின்னர், அந்த சிறுமியை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று தனிமையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். 3 மாதங்களில் சுமார் 5 முறை ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவி இந்த உறவை முறிக்க முயன்றபோது அவரை மிரட்டியும், கண்காணித்தும் வந்துள்ளார்.
சிறுமியின் தோழி ஒருவர் இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கவே, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியர், நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
