தமிழகத்தில் அனைத்து நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்களை பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு எட்டப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா மற்றும் சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மக்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்ததை கண்டு பொதுமக்கள் பலரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் இதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என்று விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்தப் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
