பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே, ஜெயக்குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், தோப்பு வெங்கடாசலத்தின் மனுவை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலத்தின் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகுந்த காரணங்கள் எதுவுமில்லை எனக் கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பெருந்துறை எம்.எல்.ஏ. பதவி காலியான போதிலும், அங்கு தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதற்கிடையே மனுதாரரான தோப்பு வெங்கடாசலமும் அண்மையில் திமுகவில் இருந்து விலகினார். தற்போது உயர்நீதிமன்றம் தேர்தல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், பெருந்துறை தொகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டச் சிக்கல்கள் அனைத்தும் விலகியுள்ளன.
தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வழக்குகள் முடிவடைந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ள நிலையில், தற்போது பெருந்துறை வழக்கும் முடிவுக்கு வந்திருப்பதால், அத்தொகுதிக்கும் அதே அக்டோபர் 6-ஆம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
மற்றொருபுறம், கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதியழகன், தன் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் கரூர் தொகுதிக்கான சட்டப் போராட்டமும் விரைவில் முடிவுக்கு வரும் எனக் எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் அங்கு உடனடியாகத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
