மதுரை மாநகர் கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தமிழ்செல்வன், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கிரிக்கெட் விளையாடச் செல்வதாக வீட்டில கூறிவிட்டுச் சென்ற நிலையில், மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடியும் மாணவனைக் கண்டுபிடிக்க முடியாததால், கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள கண்மாய் முட்புதரில் இருந்து தமிழ்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விளையாடச் சென்ற சிறுவன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை குறித்துப் பேசிய இறந்த மாணவனின் தாயார், தனது மகன் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நட்பாகப் பேசி வந்ததாகவும், இதனால் கோபமடைந்த அம்மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனைக் கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே, காதலும் அதன் தொடர்ச்சியான பகையுமே இக்கொலைக்குக் காரணமா என்ற கோணத்தில் மாணவியின் தந்தையின் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸின் முதற்கட்ட விசாரணையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார். இதை கண்டித்த மாணவியின் தந்தை வீட்டு முகவரியை கேட்டதற்கு, தான் வசிக்கும் பட்டியலின பகுதியை மாணவன் கூறியது தெரிய வந்துள்ளது.
