இன்று வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடந்து பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் சொர்க்க வாசலே இல்லாத பெருமாள் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. இது பக்தர்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அந்த பெருமாள் கோவில்கள் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.
108 திவ்யதேச கோவில்களில் ஒன்றான கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் பெருமாள் நேரடியாக வைகுண்டத்தில் இருந்து மகாலட்சுமி அவதாரமான கோமளவல்லியை மணம் முடிப்பதற்காக இங்கு வந்ததாக ஐதீகம். வைகுண்டத்தில் தான் எழுந்தருளி இருக்கும் ரதத்துடனே இங்கு வந்து காட்சி தருவதால் இவரை வணங்கினாலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்பதால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் என்னும் ஸ்ரீ பரமபதநாதர் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இந்த ஆலயத்தில் மூலவர் பெயரே வைகுண்ட பெருமாள் என்பதுதான். இவரை தரிசித்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் நித்திய சொர்க்கவாசல் தலமாக கருதப்படுகிறது.
திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜ பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோவில் பூலோகத்து விண்ணகரம் என்பதால் இந்த கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இந்த கோவிலே பரமாபதமாக கருதப்படுவதால் மற்ற பெருமாள் கோவில்களை போல் இங்கு சொர்க்க வாசல் கிடையாது.
திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரிகாசபெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. ஸ்ரீதேவியை மணம் முடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக இங்கு வந்து விட்டதால் இக்கோவில் பூலாக வைகுண்டமாக கருதப்படுகிறது. இவரை வணங்கினாலே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இந்த கோவில்களில் சொர்க்கவாசல் கிடையாது.
