எம் ஜி ஆருக்கு முன்பே திராவிட முன்னேற்ற கழகத்தில் சிவாஜி கணேசன் உறுப்பினாரானார் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரியாத உண்மை. ஆனால் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகி காங்கிரஸில் ஐக்கியமானார். அதே போல காங்கிரஸில் தீவிர உறுப்பினராக இருந்த எம் ஜி ஆர் பின்னர் அண்ணா தலைமையில் திமுகவில் ஐக்கியமானார்.
எம் ஜி ஆர் அப்போதுதான் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆகியிருந்தார். அப்போது அறிஞர் அண்ணாதுரை எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.
எம்.ஜி.ஆர் அப்போது காங்கிரஸில் உறுப்பினராக இருந்தார். ஆனாலும், அந்த நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எனவே அவரை அழைத்துகொண்டு அண்ணாவிடம் சென்றுள்ளார் இருவருக்கும் பொதுவான நண்பர். எம் ஜி ஆரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி ‘இவர்தான் நம் நாடகத்தில் சிவாஜியாக நடிக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.. அதுதான் அண்ணாவுடன் எம் ஜி ஆருக்கு முதல் நேரடி சந்திப்பு.
எம் ஜி ஆருக்காக வசனங்களில் அண்ணாவின் சம்மதத்துடன் எஸ்.ஏ.சாமி என்பவர் வசனங்களில் திருத்தம் செய்தார். ஆனால், ‘அந்த நாடகத்தில் நீ நடிக்க வேண்டாம்’ என எம்.ஜி.ஆரின் அவரின் அண்ணன் சக்கரபாணி சொல்லிவிட்டதால் அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை. மற்றொரு காரணமாக அந்த நாடகத்தில் மிக நீண்ட பக்கம் பக்கமான வசனங்கள் இருந்ததால் அதைத் தன்னால் மனப்பாடம் செய்து பேச முடியாது என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் நாடகத்தின் நாள் நெருங்கி விட்டதால் அவசர அவசரமாக அந்த வேடத்தில் வி.சி.கணேசன் என்கிற புதுமுக நடிகர் நடிக்கவைக்கப்பட்டார். கிடைத்த குறுகிய நேரத்தில் அனைத்து வசனங்களையும் மனப்பாடம் செய்து அட்சரம் பிசகாமல் பேசி நடிப்பிலும் அசத்தியுள்ளார். அவரின் நடிப்பைப் பார்த்து வியந்த பலரில் ஒருவர் பெரியார். இந்த நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவரின் பெயருக்கு முன்பு சிவாஜி சேர்த்து சிவாஜி கணேசன் என்ற பட்டத்தையும் வழங்கினார். அப்படிதான் வி சி கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.
