திருமண மண்டபத்தில் புதுமாப்பிள்ளை…! ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 27, 2025

Spread the love

சென்னை பல்லாவரம், மல்லிகா நகரைச் சேர்ந்த கிளின்டன் (30) என்பவர் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான தொழில் செய்து வந்தார். யூடியூப் நிகழ்ச்சிகளில் இவர் அளித்த ஆலோசனைகளைக் கண்டு, பலர் இவரைத் தொடர்பு கொண்டு முதலீடு செய்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா (35) என்பவர், கிளின்டன் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தவணைகளில் 75 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

பின்னர், முதலீடு இழந்ததாகவும், மேலும் பணம் தேவைப்படுவதாகவும் கிளின்டன் கூறியதால், மோகனப்பிரியா தனது கார் மற்றும் சொத்தை அடமானம் வைத்து சுமார் 75 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மொத்தமாக மோகனப்பிரியாவிடம் சுமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை வாங்கிய கிளின்டன், அதைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

   

இதையடுத்து, கிளின்டன் மீது மோகனப்பிரியா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கிளின்டனுக்குத் திருமணம் நடந்ததைக் கண்ட, அவரிடம் பணத்தை இழந்த மோகனப்பிரியா உள்ளிட்ட பலர் திருமண மண்டபத்திற்குத் திரண்டு வந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த மணமகன் கோலத்தில் இருந்த கிளின்டனைப் பிடித்து அவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.

   

அடி தாங்க முடியாமல் கோட் சூட்டில் இருந்த கிளின்டன் அங்கும் இங்கும் ஓடியதாகவும், உறவினர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகன் தர்ம அடி வாங்கிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.