50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமாகவும், பலத்துடனும் இருக்க, அவர்களின் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய நான்கு அத்தியாவசிய உணவுகளை டாக்டர் பிரசாந்த் தருண் பரிந்துரைத்துள்ளார். வயது முதிர்வால் ஏற்படும் பலவீனங்கள் மற்றும் நோய்களைத் தடுக்க இந்த உணவுகள் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டார்க் சாக்லெட்: சாக்லெட்டுகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கான உணவுதான். இதில் 70-80% கொக்கோ இருக்க வேண்டும். இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களை நிறைவாகக் கொண்டுள்ளது.
கருப்பு எள்: இது நமது ஊரின் சூப்பர்ஃபுட் என்று கூறலாம். எள்ளில் அதிகப்படியான கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆளிவிதை: இது ஒரு பவர்-பேக்கடு ஊட்டச்சத்து உணவாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தைச் சீராக்க மற்றும் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.
கேழ்வரகு: 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு 40 வயதிலிருந்தே ஏற்படும் கால்சியம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ராகி சிறந்த உணவாகும். இதை ‘கால்சியத்தின் ஹீரோ’ என்று அழைக்கலாம். மேலும், இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது.
மேலே குறிப்பிட்ட இந்த நான்கு உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும் என்று டாக்டர் பிரசாந்த் தருண் அறிவுறுத்தியுள்ளார்.
