“அன்று ஒரு டயலாக்கில் பேமஸ்… இன்று காலில் 3 விரல்கள் இல்லை…!” முதலமைச்சர் விஜயிடம் கதறும் பாவா லெட்சுமணன்…!!

By Swetha on ஆனி 16, 2026

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லெட்சுமணன், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமலும் கடுமையான உடல்நலக் குறைவாலும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார். ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அவர் பேசிய “வாம்மா மின்னல்” என்ற ஒரே ஒரு வசனம் அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றி, பின்னர் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனம் பெற்றார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, கடந்த சில காலத்திற்கு முன்பு பெங்களூரு சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டரில் கால் பட்டு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான வீக்கத்தைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலில் உள்ள மூன்று விரல்கள் நீக்கப்பட்டன. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இவரால் “நடக்க முடியாது” என்ற தவறான வதந்தி சினிமா வட்டாரத்தில் பரவியதால், இவருக்கு வந்துகொண்டிருந்த திரைப்பட வாய்ப்புகள் முற்றிலுமாக நின்றுபோனதாக வேதனை தெரிவித்துள்ளார்.

   

தற்போது வசிப்பதற்கு ஒரு நிலையான இடம் கூட இல்லாமல் தவித்து வரும் பாவா லெட்சுமணனுக்கு, நடிகர் ஜீவா மற்றும் ‘கேபிஒய்’ பாலா போன்ற சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகின்றனர். வறுமையின் விளிம்பிற்குச் சென்றுவிட்ட தனக்குத் திரைப்பட வாய்ப்புகளோ அல்லது வாழ்வாதார உதவியோ தேவை என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.