உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் அவசரச் சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, அங்கிருந்த ஆக்சிஜன் சிலிண்டரை சுத்தியலால் அடித்து உடைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் அவசரக்கால மருத்துவச் சேவைகளின் தற்போதைய அவல நிலையை இந்தச் சம்பவம் அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளது. அவசர காலத்தில் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் போது, முறையான மருத்துவக் கருவிகள் கூட பயன்பாட்டில் இல்லாதது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையைச் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “இங்கேயே இந்து-முஸ்லிம் என்று சண்டை போட்டுக் கொண்டும், மதத்தைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று பா.ஜ.க-விற்கு வாக்களித்துக் கொண்டும் இருங்கள்; மனிதர்கள் உயிர் பிழைக்கிறார்களோ இல்லையோ, மருத்துவச் சேவைகள் இதைவிட மோசமடைந்தாலும் பரவாயில்லை, மதம் தான் முக்கியம்” என்று மக்கள் தங்களின் குமுறல்களையும், அரசியல் ரீதியான விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் காரசாரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
