“கடந்த 5 வருஷமா நரக வேதனை அனுபவிச்சேன்”… கண்கலங்கிய அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா பரபரப்பு பேட்டி…!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், அண்மைக்கால தேர்தல் பின்னடைவுகளும் அக்கட்சியைப் பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. அதன் உச்சகட்டமாக, நேற்று அதிமுகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். தலைமைச் செயலகத்திலேயே இந்த இணைவு நிகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி திருப்பங்களின் தொடர்ச்சியாக, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தற்போது தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்கள் அணிதிரளத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தவெகவுக்குத் தங்களின் ஆதரவை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலுமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர் எடப்பாடி அணியை விட்டும், அதிமுகவை விட்டும் வெளியேறி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

   

தனது ராஜிநாமா முடிவு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த இசக்கி சுப்பையா, தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாகத் தனது தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்ய முடியாமல், கடுமையான மன உளைச்சலுக்கும் கஷ்டத்திற்கும் ஆளானதாக அவர் பரபரப்பு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது ராஜிநாமாவை ஏற்க மறுப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், தனது ராஜிநாமா கடிதத்தின் மீது சபாநாயகர் சட்டப்படி உரிய முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.

   

தொடர்ந்து பேசிய இசக்கி சுப்பையா, தமிழக முதல்வர் விஜய் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகப் பாராட்டு தெரிவித்தார். மேலும், வரும் நாட்களில் வாய்ப்பு கிடைத்தால் முதலமைச்சரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ‘நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது’ என்பதால் தற்போதைக்கு உறுதியாக எதுவும் கூற இயலாது என்றும் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களின் இந்த அடுத்தடுத்த ராஜிநாமாக்கள் அக்கட்சியின் ஒற்றைத் தலைமைக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.