“கடவுளே காப்பாத்து” 4 மணி நேரம் அந்தரத்தில் ஊசலாடிய உயிர்… தரையிறங்க முடியாமல் தத்தளித்த விமானம்… கதறி அழுத பயணிகள் – பகீர் வீடியோ..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்பள்ளிக்குச் சென்ற ‘பிளை91’ (Fly91) விமானம், நடுவானில் மோசமான வானிலை காரணமாக நான்கு மணி நேரம் தத்தளித்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 3 மணியளவில் ஹூப்பள்ளிக்கு (Hubballi) புறப்பட்ட IC3401 என்ற விமானம், மாலை 4:30 மணிக்கு தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால், ஹூப்பள்ளி அருகே சென்றபோது நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், விமானம் சுமார் நான்கு மணி நேரமாக முண்ட்கோட், தாவணகெரே மற்றும் சிவமோகா ஆகிய பகுதிகளுக்கு மேலே வானிலேயே வட்டமடித்தது.

இந்த இக்கட்டான சூழலில், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் உறைந்தனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், பெண் பயணி ஒருவர் கண்ணீர் மல்க கடவுளைப் பிரார்த்தனை செய்வதும், மற்ற பயணிகள் பீதியில் அலறுவதும் பதிவாகியுள்ளது. பயணிகள் சிலர் விமானியை பெங்களூரு அல்லது பெல்காமுக்கு விமானத்தைத் திருப்பிச் செல்லுமாறு கூச்சலிட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மாலை 7:30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

   

   

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பிளை91 நிறுவனம் அதனை மறுத்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே விமானம் தரையிறக்கப்படவில்லை என்றும், இது போன்ற சூழலில் விமானத்தை வானிலேயே வட்டமடிக்கச் செய்வதும் அல்லது மாற்றுப் பாதைக்குத் திருப்புவதும் ஒரு சாதாரண பாதுகாப்பு நடைமுறை (SOP) தான் என்றும் விளக்கம் அளித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.