16 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அமீர் – ஞானவேல் ராஜா, ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை விவகாரம் தற்பொழுது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி என இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வரும் இந்த வேளையில் தற்பொழுது நடிகர் பொண்வண்ணனும் தனது ஆதரவை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியை பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கு முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது,அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலம் கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன். பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானபடுத்திவிட்டு,
டப்பிங்.. எடிட்டிங், ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மனநிலையுடன் தான் வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது படைப்பிற்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.
படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் . உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவன் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல் மொழியும், பேச்சு திமிரும்,வக்கிரமாக இருந்தது.
தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டு விட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை. இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள். பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்கும் இடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலர வேண்டும் என்ற ஆசைகளுடன்..”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…