மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வார்ஜே பகுதியில், அசைவ உணவு கேட்டதற்காக பெற்ற மகனையே தந்தை அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பகவத் கெய்க்வாட் மற்றும் பார்வதி தம்பதியரின் இளைய மகனான 30 வயது நிரம்பிய மகேஷ், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது இந்துக்களின் புனிதமான சிரவண மாதம் என்பதால், வீட்டில் அசைவம் சமைக்கப்படவில்லை. ஆனால், தனக்கு கண்டிப்பாக அசைவ உணவு வேண்டும் என்று கூறி மகேஷ் பெற்றோரிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை பகவத் கெய்க்வாட் மகனை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகேஷ், மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை மறைக்க நினைத்த பெற்றோர், அடுத்த நாள் அதிகாலையில் மூத்த மகன் கணேஷிடம் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். நள்ளிரவு 2 மணிக்கு தலையில் காயத்துடனேயே மகேஷ் வீட்டிற்கு வந்ததாக அவர்கள் பொய் கூறியுள்ளனர். ஆனால், தனது தம்பி இரவு 8.30 மணிக்கே வீட்டிற்கு வந்ததை கணேஷ் நேரில் பார்த்திருந்ததால், அவருக்கு சந்தேகம் எழுந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் உள்காயம் காரணமாகவே மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், மகனை கொலை செய்த குற்றத்திற்காக தந்தையையும், உண்மையை மறைத்து நாடகமாடிய தாயையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
