பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்தது குறித்துப் பேசிய சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், இந்தியாவில் பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு உண்மையான மரியாதை கிடைப்பதில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல் 90 சதவீதப் பெண்களால் அரசியலில் ஈடுபட முடியாது” என்று மிகவும் தரம் தாழ்ந்த கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்கா முதல் இந்தியா வரை அரசியல்வாதிகள் பெண்களை வேட்டையாடும் நோக்கத்தில் பார்ப்பதாகவும், பெண்களைச் சுரண்டும் கலாசாரம் வேரூன்றிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பப்பு யாதவின் இந்த அருவருப்பான கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஒரு எம்.பி-யின் பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துவதாக பாஜக சாடியுள்ளது. “தன் உழைப்பால் முன்னேறிய பெண் அரசியல்வாதிகளைப் பப்பு யாதவ் அவமதிக்கிறார்; இதற்காகப் பிரியங்கா காந்தி அவரை நீக்குவாரா?” என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் பப்பு யாதவின் பேச்சுக்கு எதிராகப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து (Suo Motu) கையில் எடுத்துள்ள பீகார் மாநில மகளிர் ஆணையம், பப்பு யாதவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “பெண்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பேசியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய ஏன் பரிந்துரைக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பப்பு யாதவின் அரசியல் வாழ்க்கையில் இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
